டீ என்றால் டீதூளின் அந்த வாசனை மற்றும் நன்கு காய்ச்சிய அந்த பாலின் மணம் இரண்டும் கலந்து மனதை மயக்கவேண்டும். ஆனால் இப்பொழுதெல்லாம் இஞ்சி டீ என கொடுக்கிறார்கள். அதில் டீதூளின் வாசனையும் இல்லை, பாலின் மணமும் இல்லை, இஞ்சியை அரைத்து குடித்தது போல் இருக்கிறது. இதில் தொண்டைவேறு எரிகிறது
முன்பெல்லாம் இஞ்சி டீ என்று கேட்டால் மட்டுமே கொடுப்பார்கள் இப்பொழுது டீ கேட்டாலே இஞ்சி டீதான் கொடுக்கிறார்கள். அதில் சுகர்வேறு அதிகம் போட்டு சுகர் சிரப் மாதிரி இருக்கிறது. ப்ளாக் டீ, கிரீன் டீ, லெமன் டீ என எத்தனையோ இருக்கிறது ஆனால் இந்த இஞ்சி டீ மட்டும் எனக்கு பிடிக்கவேயில்லை.
பக்கத்திலேயே கடை இருக்கிறது அதில் எப்பொழுதும் இஞ்சி, பால், டீ என அத்தனையும் ஒருசேர கலக்கப்பட்டு கொதிநிலையில் இருக்கும். கேட்பவர்களுக்கு ஜீனி மட்டும் கிளாசில் போட்டு ஒரு டம்ளர் மசாலா டீயை ஆற்றி கொடுக்கிறார்கள். தலை வலிக்கு இந்த மசாலா டீயை குடித்தால் இன்னும் அதிகமாக தலை வலிக்கிறது.
அரை கிலோ மீட்டர் தாண்டி இருக்கும் ஒரு டீக்கடைகாரர் டீயை மட்டுமே கொடுக்கிறார். பால் தனி, டிக்காஷன் தனியாக இருந்தால்தான் இரண்டும் கலக்கும்போது ஒரு சுவை இருக்கும் ஏனனெனில் இரண்டும் தனித்தனியாக நல்ல கொதிநிலையில் காய்ச்சப்படுகிறது.
தேனீர் ஒரு தற்காலிக விடுதலை, தேனீர் ஒரு மனதின் கொண்டாட்டம். தேனீர் ஒரு இடைவேளை பொழுது, தேனீர் ஒரு சுப ஆரம்பம், தேனீர் மனிதனை ஆசுவாசப்படுத்துகிறது. தேனீர் மனிதனை ஊக்கப்படுத்துகிறது. தேனீர் ஒரு ஆறுதல். கொழுப்பை கரைக்க மாத்திரை இருக்கிறது. இதற்காக எல்லாம் தேனீரை பயன்படுத்தாதீர்