முதல் படத்தை தேவி திரையரங்கில் பார்த்ததாக ஞாபகம். மிகப்பெரிய திரையில் படத்தை பார்ப்பது அலாதியான அனுபவமாக இருந்தது. சத்யம் தியேட்டரில் பார்க்கவேண்டி எவ்வளவோ முயற்ச்சித்தும் அப்பொழுது பார்க்கமுடியவில்லை. பிறகு மும்பைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் இங்கு அவதார் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருந்தது. சரி மும்பையில் படத்தை பார்க்கலாம் என நினைத்து போனால் மும்பையில் படம் எடுத்து பல காலம் ஆகிறது என்றார்கள். என்னய்யா இது, சென்னையில் ஹவுஸ்புல் ஷோவாக ஓடும் ஒரு படம் மும்பையில் தியேட்டரைவிட்டே ஓடிவிட்டது என்றால் பார்த்துகொள்ளுங்கள் நாமெல்லாம் எவ்வளவு சினிமா பைத்தியங்களாக இருக்கிறோம் என்று..
சரி போனது போகட்டம் அடுத்து அவதார் 2 வந்தால் 3D யில் மிகபிரமாண்டமான தியேட்டரில் பார்க்கவேண்டும் என்று நினைத்துகொண்டு அத்துடன் அவதாரை மறந்துபோனேன்.
பத்து வருடங்கள் ஓடிவிட்டது. பேச்சிலராக இருந்தபோது பார்த்த முதல் பார்ட்டின் அடுத்த பாகம் குடும்பஸ்தனாக இருக்கும்போது பார்க்கவைத்துவிட்டார் ஜேம்ஸ் கேமரூன். அது சரி அவருக்கே வயது 68. அவரே இளமையை தொலைத்துவிட்டு முதுமையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார் இந்த இடைவெளியில். இப்பொழுது அவரின் பக்குவம் மேலும் பன்பட்டிருக்கும். இப்பொழுது அவரால் மீண்டும் ஒரு டைட்டானிக் போன்ற காதல் காவியத்தை இயக்கமுடியுமா என்ன? முடியாது என்பதுதான் என்னுடைய வாதம். அவர் முதல் அவதாரிலேயே தன் தடத்தை மாற்றிவிட்டார். இயற்க்கையை காதலிக்க தொடங்கிவிட்டார். அப்படி இருக்கும்போது இரண்டாவது பார்ட் எப்படி இருக்கிறது. ?
2K kids ஆக இருக்கும்போது துள்ளவதோ இளமை எடுத்த செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் எடுத்தபோது அவரின் பக்குவம் தெளிவாக தெரிந்தது. அதுபோலத்தான், டைரட்கர்களின் வயது ஆக ஆக காதலை தாண்டி குடும்பதலைவன் உடைய பிரச்சனைகளை பேச ஆரம்பிக்கறார்கள், அல்லது நாட்டின் பிரச்சனைகளை பேச ஆரம்பிக்கிறார்கள். அப்படி என்றால் வயதான டைரக்டர்களால் 2K kids ஏற்றார்போல் காதல் கதை எடுக்கமுடியாதா என்று என்னால் திட்டவட்டமாக சொல்லமுடியவில்லை. எழுத்தாளர் சுஜாதாவின் கைவண்ணத்தில் பாய்ஸ் திரைப்படம் அதற்கு விதிவிலக்கு என்பதால்.
ஓகே விஷயத்திற்கு வருவோம். ஜேம்ஸ் கேமரூனை பொறுத்தவரை அவர் எந்த விஷயத்தையும் டீடெய்டாக அனுகுவார் என கேள்விபட்டிருக்கிறேன். அது ஒரு பெர்பெக்ஷன். அதேபோல அவருக்கு கடலின் மீது ஒரு காதல் எனவும் சொல்லியிருக்கிறார்கள். டைட்டானிக்கில் தெரியும் கடல் காதல் இப்பொழுது கடலில் உள்ள ஜீவராசிகளை காதலிக்கவும் தொடங்கியுள்ளது நல்ல மாற்றம்.
கடல் தன்னுள் யாரையும் அனுமதிப்பதில்லை. கடல் மேல் பயணிக்கலாம், கரையினுள் விளையாடலாம் ஆனால் ஏனோ அதனுள் உள்புகுவதற்கு மூச்சை பிடித்துகொள்ளவேண்டும் என்பதாலேயே யாரும் கடலினுள் புகுவதற்கு தயாராக இல்லை. திமிங்கிலம் தன் வாலை காட்டும் அந்த காட்சிகள் எல்லாம் சிறுவயதில் ஆச்சரியப்படுத்தியவை. சுறாவின் வருகையை அதன் துடுப்பை கண்டு அறிந்துகொள்வதன் ஆர்வத்தை, ஹோண்டா சிட்டி தன்னுடைய காரில் அதன் துடுப்பை இன்றும் வைத்திருக்கிறது. கடல் நம்முடன் இயற்க்கையாக இணைந்துள்ளது. எப்படி என்கிறீர்களா? நாம் சாப்பிடும் உப்பில் உள்ளது கடல் ஆதலால் கடல் இயற்க்கையாகவே நம்முடன் இணைத்திருக்கிறது.
அவதாரின் கதை என்பது மேலோட்டாக பார்த்தால் அது ஒரு தந்தை தன்னுடைய குடும்பத்தை காக்கும் போராட்டம். KGF என்பது எப்படி ஒரு கிராமத்து தாயின் வைராக்கியமோ அதைபோல். தன்னை குறிவைத்து தாக்குப்படும் தாக்குதலால் தன்னை நம்பி இருக்கும் மக்களையாவது காப்பாற்றலாமே என ஒரு குடும்பதலைவன் தன் குடும்பத்தோடு எதிரிகளின் கண் படாத இடத்திற்கு சென்று தலைமறைவாகிறான். தலைமறைவு வாழ்க்கை என்பது துயரமானது. எல்லாம் இருந்தும் ஒரு அகதியான வாழ்க்கை. வன வாழ்க்கை விட்டு கடல் வாழ்க்கையில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினாலும் அந்த கடல் சார் மனிதர்களை போல மாறிஆக வேண்டுமே. எப்படி அந்த கடல் வாழ்க்கையில் அவர்கள் தங்களை இணைத்து கொள்கிறார்கள் என்பதே மீதம் உள்ள கதை. ஈகுவா என்ற தெய்வீகமரம் கடலுக்கடியில் கூட இருக்கிறது தன்னை சார்ந்த கடல்மனிதர்களுக்கு.
சாரதாண மனதர்களால் 5 நிமிடம் மூச்சை நிறுத்தி கடலில் பயணிக்க முடிந்தால் கடல் மனிதர்களால் 7 அல்லது 8 நிமிடம் மூச்சை நிறுத்தி பயணிக்கலாம். ஆனால் அவர்களின் உடல்வாகு என்பது நீந்துதலுக்குறிய முன்னேற்படாக இருக்கிறது. ஒரு கடல் கண்ணியின் உடல்வாகு எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்துகொள்ளுங்கள். ஆனால் என்ன ஒன்று இவர்களுக்கும் வால் இருக்கிறது ஆனால் இது நீந்துவதற்கான வால் பகுதிபோல் இருக்கிறது. கரங்கள் இரண்டும் பரந்து விரிந்து இருக்கிறது. நல்ல கற்பனை வளம்தான் ஜேம்ஸ் கேமரூனுக்கு.
Youtuber பிரசாந்த் சொல்லிருந்தார் திமிங்கில வேட்டை என்பது எவ்வளவு கொடூரமானது என்பதை பற்றியும் அதை பற்றி இந்த திரைபடத்தில் நுனுக்கமாக காட்டியிருக்கிறார்கள் என்றும் சொல்லி இருந்தார். உண்மைதான். படத்தில் பார்க்கும்போது அந்த திமிங்கில வேட்டைதான் படத்தின் அச்சாணி போல் இருக்கிறது. அதை சுற்றிதான் கதை களத்திற்கான திரைக்கதை உருவாக்கபட்டிருக்கிறது. அது ஒரு சாமர்த்தியான விஷயம். மெகா சைஸ் வஞ்சிரம் மீனே நமக்கு கண்காட்சி போல் உள்ளது எனும்போது இந்த திமிங்கில சைஸ் எல்லாம் காணக்கிடைக்காத காட்சிகள்.
வாழ்க்கை முழுவதும் நீங்கள் எதற்கோ பயந்து ஓடிக்கொண்டே இருக்கமுடியாது. என்றாவது ஒரு நாள் நீங்கள் எதிர்த்து நின்றே ஆக வேண்டும். அதைத்தான் ஹீரோ கடைசியில் உணர்கிறார். தன் மகனை இழந்த புத்திர சோகம் அவர்களை வாட்டுகிறது. அதுகூட அவர்களின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் எது எப்படியோ அடுத்த திரைப்படம் கடல் சார்ந்துதான் இருக்கும் என டைரக்டர் கோடிட்டு காட்டிவிட்டார். ஏனெனில் அடுத்த பார்ட்டுக்கான காட்சிகளும் அனேகமாக எடுக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். ஒரு தொடர்ச்சியான படத்தின் முதல் கட் வெர்ஷன்தான் இந்த படமாக கூட இருக்கலாம், பொன்னியின் செல்வன்போல்.
எது எப்படியோ, இந்த படம் என்னை உலுக்கிவிட்டது. படத்தின் சில காட்சிகளை நான் இங்கே சொன்னதால் உங்களின் படம் பார்க்கும் ஆவல் குறைந்துவிடாது மாறாக அது உங்களை ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன். இந்த படம் உங்களின் இதயத்தில் ஊடுருவும் படம். இதை நீங்கள் உணரத்தான் முடியும் மாறாக சில காட்சிகளை நீங்கள் கண்டிருந்தாலும் அது உங்களை பாதிக்காது. முழு படத்தையும் திரையில் பாருங்கள் 3D கண்ணாடியுடன் நல்ல சவுண்ட் சிஸ்டத்தில் அதுதான் உங்களை பன்டோராவின் கடலுக்குள் அழைத்து செல்லும்.
டிவிட்டரில்கூட நான் சொல்லிருந்தேன், Kung fu panda படம் கூட குழந்தைகளுக்கான படம் என்றாலும் அதை எடுத்த டைரக்டர் என்னவோ 50 வயதிற்க்கும் மேற்பட்டவர்தான் அதனால்தான் படம் முழுவதும் அந்த டைரக்டரின் பக்குவம் இழையோடும். குழந்தைகளின் மனம் இதை ஏற்கும் பக்குவம் கொண்டிருக்கிறதா என்பதை தாண்டி அக்குழந்தைகளுடம் அந்த படத்தை பாக்கும் அந்த பெற்றோர்களுக்கு அது உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைதான் நான் உணரவேண்டும் அதுபோல் தான் அவதார் 2. குழந்தைகள் கடல் தூகாலத்தை அனுபவிக்கும் நேரத்தில் பெற்றோர்களாகிய உங்களுடன் ஜேம்ஸ் கேமரூன் இயற்க்கையை கனெக்ட் செய்கிறார் உங்களுக்கு தெரியாமலேயே அதுதான் டைரக்டரின் சாமர்த்தியம். படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது உங்களுக்கு இதயம் ஒரு பாரத்தை உணரும் பாருங்கள் அது வேறு யாரும் ஏற்றியதில்லை ஜேம்ஸ் கேமரூன் ஏற்றியதுதான். அந்த நினைவுகள் பிரிய பல மணிநேரங்கள் ஆகும்.
மீண்டும் படத்தை பார்க்கவேண்டும் என நீங்கள் முயல்வீர்கள். அதுதான் படத்தின் வெற்றி.