நீண்ட நாட்களாக இந்த திரைப்பட போஸ்டர் OTT யில் அவ்வப்போது வந்து கொண்டே இருந்தது. என்னடா இது, எப்பொழுது பார்த்தாலும் இது வருகிறதே சரி என்னதான் படம் இது என்று பார்த்துவிடுவோம் என்று பார்த்தேன்.
அருமையப்பா அருமை. இந்த அனிமேஷன் படங்களின் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பு வர காரணமே குஙபூ பாண்டாதான். குழந்தைகளுக்கு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆனால் பெரியவர்களுக்குதான் இது பிடிக்கும். சில அனிமேஷன் திரைப்படங்கள் உண்மையிலேயே குழந்தைகள் பார்க்கும்படிதான் இருக்கும் அதனால் முதல் கால்மணி நேரம் அல்லது அரைமணி நேரம் பார்த்துவிட்டு பல திரைப்படங்களை கடந்துவிடுவேன். அதுபோல்தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன். நான் ஜட்ஜ் செய்யும் அந்த முதல் கால்மணி நேரத்தில் இந்த படத்தின் முதன்மையான கேரக்டரை குழந்தை பருவத்திலிருந்து முதுமை வரை காண்பித்து, படம் என்ன சொல்லவருகிறது என்பதை அடிகோடிட்டு காட்டியவிதம் அபாரம்.
குழந்தைகளின் மனதில் தந்தை சூப்பர்மேனாக வாழுவார் ஏனெனில் குழந்தைகள் சாகசம் என்று நினைக்கும் பைக் ரைடிங் முதல் பெட் டைம் ஸ்டோரி வரை தத்தமது கேரக்டர்களில் குழந்தைகள் தன் தந்தையை வைத்து பார்க்கும். மேலும் சில குழந்தைகள் தங்களுக்கு பிடித்த சில சூப்பர் ஹீரோக்களை தாங்களே பாவித்துகொண்டு pretend play எனும் கேம்களை ஆடுவார்கள். அதுபோல் ஒரு குழந்தை நினைக்கிறது, இதனை மேலும் வலுவாக்கும் விதமாக உடன் சேரும் குழந்தைகளும் நினைத்தால் அது அந்த கனவை மேலும் வலுவாக்கும், அக்குழந்தையை, அதன் சிந்தனையை அதனை நோக்கி மேலும் வலுபடுத்தும். அதுதான் இந்த திரைப்படத்தின் மைய புள்ளி.
Paradise Falls எனும் இடத்திற்கு செல்லவேண்டும் என்று தாங்கள் சேமிக்கும் பணம் அவ்வப்போது எதிர்பாரா விதமாய் வரும் செலவுகளால் கரைந்துபோக, ஒரு கட்டத்தில் தன் மனைவியும் வயோதிகம் காரணமாக இறந்துபோக, முதுமையின் காரணமாய் ஹீரோவும் வீட்டிலேயே அடைந்து கொள்கிறார்.
சிறு வயதில் பலூனை பிடித்து கொண்டு தான் ஓடிய பாலபருவம், பின்பு அதே பலூனை விற்கும் சேல்ஸ்மேனாக மாற்றி, அவரை முதுமையில் தள்ளிவிட்டிருக்கும். பலூனில் ஆரம்பித்த வாழ்க்கை பலூனிலேயே முடித்திருக்கும்.
தான் வாழ்ந்த வாழ்க்கை என்பது ஒருவருடைய போட்டோ ஆல்பத்தில் தெரிந்துவிடும். அதுபோல் மனைவி தனக்களித்த ஒரு போட்டோ ஆல்பம் ஆரம்பித்த சில பக்கங்களில் முடிந்திருக்கும். நிரப்பப்படாத பக்கங்கள்தான் அதிகமாக இருக்கும். தன் மனைவி மற்றும் தன்னுடைய ஆசையான Paradise Falls க்கு அந்த வீட்டையே பெயர்த்துகொண்டு போகும் ஆளவுக்கு பலூன்களை கட்டி பறந்து தன்னுடைய கனவை நினைவாக்குவார்.
இந்த உலகம் மிகப்பெரியது. வாழ்க்கையின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னாமாகி, நாம் இந்த உலகை சுற்றி பார்ப்பதை விட்டொழிந்துவிட்டோம். அட்வென்சர்ஸ் புக் என்று ஒரு போட்டோ ஆல்பத்தை நாம் உருவாக்க மறந்தாலும், அட்லீஸ்ட் இந்த உலகை எக்ஸ்ப்புளோர் செய்யவாவது நாம் முன்வரவேண்டும்.
UP : கண்டிப்பாக காணுங்கள்.