பிரியாணியில் ஏன் எண்ணெய் இவ்வளவு சேர்க்கப்படுகிறது என்பது எனக்கு புரியவில்லை. மசாலாவிற்காகதானே எண்ணெய் போடப்படுகிறது? முதலில் அந்த மசாலா வதக்குவதற்கு எண்ணெய் பின்னர் அந்த மசாலாவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றப்பட்டு பிரியாணி தயார் செய்யப்படுகிறது. அப்படி இருந்தும் ஏன் பிரியாணியில் எண்ணெய் அவ்வளவு இருக்கிறது?.
சிலபேர் எண்ணெய் இருந்தால்தான் அது பிரியாணி இல்லையெனில் அது புளிசாதம் என்கிறார்கள். பிரியாணி தயார் செய்யும்போது பார்த்திருக்கிறேன் சில பேர் நெய் அல்லது எண்ணெய்யை பிரியாணி தம் ஆகபோவதற்கு முன்னாலோ அல்லது பின்னாலோ ஊற்றுவார்கள். ஒருவேளை அதனால்தான் பிரியாணி முழுவதும் எண்ணெயாக இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு தெரிந்து நான் சாப்பிட்ட கடைகளில் அனைத்தும் மசாலா என்ற பெயரில் எண்ணெய் மிதக்கிறது.
அதிகமான எண்ணெய் உடலுக்கு தீங்கு என்பதைவிட அது ஒருகட்டத்தில் திகட்டிவிடுகிறது.
முதல் நாள் பிரியாணி ஆகா என்று இருந்தது. இரண்டாம் நாள் அதே கடை பிரியாணி முதல் நாள் போல இல்லை. ஒருவேளை பழைய பிரியாணியை சேர்த்து விட்டார்களா என தெரியவில்லை. மூன்றாம் நாள் பிரியாணி வேறு பிரபல கடையில் சாப்பிட்டேன். ஆகா என்றிருந்தது ஆனால் எண்ணெய் ஓவராக இருந்தது.
மூன்றாம் நாள் இரவு தலைவலி ஆரம்பித்துவிட்டது. அடுத்தநாள் காலை வரை அது தொடந்தது. அத்தோடு பிரியாணி வெறி தணிந்தது. அளவான எண்ணெயோடு பிரியாணி தயார் செய்தால் அவ்வப்போது சாப்பிடலாம் இப்படி அதிகப்படியான எண்ணெயோடு சமைத்தால் காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு விடுமுறை தினங்களில் மட்டுமே சாப்பிட முடியும்.