நமது Pricefinder-ல் இதன் திறப்புத் தேதியை நான் சொல்லியிருந்தேன். அக்டோபர் 5-ஆம் தேதி கடை திறக்கப்பட்டது; அடுத்த நாளே சென்று பார்த்தேன். 4 தளங்கள் வரை திறந்திருந்தார்கள், 5-வது தளத்தில் அப்பொழுது வேலைப்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. தீபாவளி நேரத்தில் திறக்கப்பட்ட கடை என்பதால், மடிப்பாக்கம் பகுதியில் உள்ள மற்ற கடைகள் எல்லாம் கொஞ்சம் திகிலாகத்தான் பார்த்தன. நினைத்தது போலவே, ஜெயச்சந்திரன் வந்த பிறகு மற்றவர்கள் தங்கள் வழக்கமான கடைகளை மாற்றிவிட்டு இங்கு வாங்குகிறார்களா இல்லையா எனத் தெரியவில்லை; ஆனால், நான் இங்குதான் விசேஷ நாட்களுக்கான பர்சேஸைச் செய்கிறேன்.
கடை எப்படி உள்ளது? மொத்தம் 5 தளங்கள். நான் பார்த்தவரை தரைத்தளம் மற்றும் 1, 2-வது தளங்களில் துணிமணிகள்; 3-வது தளத்தில் பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்; 4-வது தளத்தில் மளிகை, காய்கறிகள், பழங்கள்; 5-வது தளத்தில் Food court (உணவுக்கூடம்). எல்லாம் கச்சிதமாக இருக்கின்றன. பார்க்கிங்கைப் பொறுத்தவரை மிகவும் தாராளமாகவே இடவசதி உள்ளது.
ப்ளஸ் (நிறைகள்): மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை வாசிகளுக்கு இந்தக் கடை வந்திருப்பது ஒருவகையில் அதிர்ஷ்டம்தான். காரணம், மாத மளிகையிலிருந்து Food court வரை எல்லாம் ஒரே இடத்தில் உள்ளன. விசேஷ நாட்களுக்கு இனி பக்கத்து ஏரியா கடைகளுக்குப் போக வேண்டியதில்லை. மிக மிக அருகில் உள்ளது. அத்துடன் மெட்ரோவும் வந்துவிட்டால், இந்த லொக்கேஷன் ‘டபுள் ப்ளஸ்’ ஆகிவிடும்.
மைனஸ் (குறைகள்): பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. விலை சரியாக இருக்கிறது, தரமும் இருக்கிறது. ஆனால், தனிப்பட்ட முறையில் எனக்குத் தேவையான துணிமணிகளை நான் இன்னும் Unlimited-ல்தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இங்கு Casual men’s wear-ஐ இன்னும் கொஞ்சம் மேம்படுத்தலாமோ என்பது என் எண்ணம். Basics போன்ற Casual brands, Unlimited-ல் கிடைப்பதால் இன்னும் அங்கேதான் போக வேண்டியிருக்கிறது. ஜெயச்சந்திரனுக்கு என்று ஒரு தனி பிராண்ட் வேல்யூ இருக்கிறது; அதேபோல Western boutique-களுக்கு என்று ஒரு தனி பிராண்ட் வேல்யூ இருக்கிறது (இரண்டையும் ஒப்பிட முடியாது).
எதை மேம்படுத்தலாம்?
- Petpooja-வின் Kiosk-கள் அருமையான விஷயம். பில்லிங் மற்றும் பேமெண்ட்டைச் சீக்கிரம் செய்துவிடுகிறோம். ஆனால், அந்த பில்களை கவுண்டரில் கொடுத்து உணவு வாங்குவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. ஆர்டர்களை நேரடியாக கிச்சனுக்கு அனுப்பிவிட்டு, டிஸ்ப்ளேவில் டோக்கன் எண்களை அறிவித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
- Kiosk-களிலும் கூட்டம் அதிகமாக நிற்கிறது. அதற்குப் பதிலாக ஆப் (App) வழியாக நேரடியாக ஆர்டர் செய்யும்படி வசதி இருந்தால் இன்னும் சிறப்பு.
- தண்ணீர் பாட்டில் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, சிறப்பு. ஆனால் 100 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் தண்ணீரை இலவசமாகவே கொடுக்கலாம். சிக்கன் ஃப்ரைடு ரைஸ் வாங்கிக்கொண்டு தண்ணீர் தேவைப்படும்போது தனியாக வாங்குவது சிக்கலாகிவிடும். 500 ml தண்ணீர் கொடுத்தால் கூடப் போதும்.
- 4-வது தளத்தில் மளிகைப் பொருட்களை மக்கள் டிராலியில் ஏற்றிக்கொண்டு வருவதால், லிஃப்ட்டில் ஏறுவது குதிரைக் கொம்பாக இருக்கிறது. இன்னும் இரண்டு லிஃப்ட்டுகளைக் கூடுதலாக அமைத்திருக்கலாம். குறைந்தபட்சம் அவை விசேஷ நாட்கள் மற்றும் கூட்டம் அதிகம் கூடும் நாட்களிலாவது இயக்கப்பட்டிருக்கலாம். எப்படி இதைத் தவறவிட்டார்கள் எனத் தெரியவில்லை.
மீண்டும் வருவீர்கள் என்றால் எதற்காக? நிச்சயமாகக் குழந்தைகளுக்கான Toy செக்ஷனுக்காகவும், உணவுக்காகவும் வருவேன். இன்னும் குழந்தைகள் விளையாடும் Play Area-வும் வரவிருக்கிறது. அதனால் நிச்சயமாக மீண்டும் மீண்டும் வருவேன் என்றே நினைக்கிறேன்.
சில பேக்கரிகள், உணவகங்களுக்கு இதுவரை ஒரு முறைகூட நான் சென்று பார்த்ததில்லை. காரணம் அவர்கள் ஆயிரம் பொருட்கள் தயாரித்து விற்றாலும், அதில் ஒரு பொருளும் என்னைக் கவரவில்லை எனும்போது அங்கு ஆயிரம் விற்றால் என்ன? 50 விற்றால் என்ன? ஒரு பிரயோஜனமும் இல்லை. ஏதோ ஒரு விஷயம் மக்களைக் கவர வேண்டும். அந்த ஒரு விஷயம் அவர்களை உங்கள் கடையைத் தாண்ட விடக்கூடாது; அதுதான் ஒரு கடையின் வெற்றி. அப்படி ஒரு விஷயத்தை இங்கு நான் கண்டேன். அது வேறொன்றும் இல்லை, இங்கு 50 ரூபாய்க்குக் கிடைக்கும் Chocolate Truffle Pastry-தான். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் இதற்காகவே நிறைய முறை இந்தக் கடைக்குச் சென்றிருக்கிறேன்.
KFC வருவதாகப் போர்டு வைத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பாகவே Fried chicken இங்கு கிடைக்கிறது. எனக்கு ஆச்சரியம்; என்னடா இது, Pressure fryer எல்லாம் வைத்திருக்கிறார்களா இல்லை Open fryer-ல் செய்கிறார்களா என்று! ஆனால் என்னால் அதை உறுதியாகக் கூற முடியவில்லை. இருப்பினும், Fried chicken சுவையாகத்தான் இருக்கிறது.
Verdict : மடிப்பாக்கம் மற்றும் கீழ்க்கட்டளை வாசிகளுக்கு ஜெயச்சந்திரன் வந்திருப்பது மிகப்பெரிய விஷயம். துணிமணிகளில் ஆரம்பித்து பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், மளிகைப் பொருட்கள், Food court என அனைத்தும் இங்கேயே கிடைக்கின்றன. எந்த டென்ஷனும் இல்லாமல் ஒரு பர்சேஸிங் போக வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ‘நம்பர் ஒன்’ ப்ரைம் ஸ்பாட் (Prime spot). கண்ணை மூடிக்கொண்டு டிக் செய்யலாம்!
